Friday, September 6, 2013

திருநங்கைகளின் மாநில மாநாட்டில் . . .

ஒருவரின் வளரிளம் பருவத்தில் , அவரது உடலில் ஏற்படும் காத்திரமான மாற்றம் காரணமாகவே அவர் தன்னைத் திருநங்கையாக உணர்கிறார் . மாறுகிறார் .

அவர் உணர்வதை , மாறுவதை அவரைத் தவிர வேறு யாரும் அந்தக் குடும்பத்தில் ஒப்புக்கொள்ளுவதில்லை .ஏற்பதில்லை .

அத்தகைய மாற்றத்திற்கு உள்ளாகும் ஒருவரை குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக , இரக்கமின்றி கொன்று விடுகிற அளவுக்குப் பேதமையும் , கொடுமையும் நிலவுவதும் உண்டு . இதற்கு மேலும் இதில் விவரிக்க எதுவுமில்லை .

பெரும் புறக்கணிப்பும் தனிமையும் வழியும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளுகிறது . இதை எழுத்தில் இறக்கி , பொதுச் சமூகத்திற்கு உணர்த்திய பெருமை வித்யாவுக்கு உண்டு .

நான் சரவணன் ... என்று துவங்கி சரவணன் என்கிற பெயர் மீது பெருக்கல் குறியிட்டு ...வித்யா என்று தலைப்பிடப்பட்ட அந்த நூல் திருநங்கைகளைப் புரிந்துகொள்ள, அறிந்து கொள்ள உதவும் தனித்துவமான நூல் .

சிறந்த மொழி நடையில் , தனது அனுபவங்களை மெய்மை துலங்க எழுதி இருப்பார் வித்யா .என் மனம் கவர்ந்த புத்தகங்களில் அதுவும் ஒன்று . அவரை நான் முதல் முறை கடந்த மாதம் ஒன்பதாம் தேதி  மதுரையில் சந்தித்தேன் .

மிக நீண்ட நாள் கண்டு அறிந்து , புரிந்து  கொண்ட நண்பர்களாய் உணர்ந்தோம்.தனது சிறுகதைத்தொகுப்பை எனக்குப் பரிசளித்தார் . இன்னும் படிக்கவில்லை . படித்த பிறகு தனியே அது பற்றி எழுதுகிறேன்

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும் , தமிழ்ப் பேராசிரியரும் , சிறந்த நாவன்மை கொண்டவருமான தோழியர் . சுந்தரவல்லியும் திருநங்கைகளின் மாநாட்டை வாழ்த்த வந்திருந்தார் .

வெறும் வாழ்த்துரையோடு நில்லாமல் திருநங்கைகளுக்காக களப் பணி செய்யும் சிறந்த பெண் போராளி சுந்தரவல்லி . நல்ல  கம்பீரமும் , ஆளுமையும் கொண்டவர் . எப்போதும் எனது அன்பிற்கும்  மதிப்பிற்கும் உரியவர் .

நாங்கள் இருவரும் இணைந்து சில அரங்குகளில் உரையாற்றி இருக்கிறோம் . அதில் திருநங்கைகளுக்கான மாநில மாநாடும் ஒன்று .

எங்கள் அனைவரது ஒற்றுமையை , ஒன்றுபட்டுச் சிந்திக்கும்,  செயல்படும் பாங்கை , இந்தப் புகைப்படங்கள் அனைவருக்கும் சொல்லுகிறது


2 comments:

Unknown said...

திருநங்கைகளுக்கு ஏற்படும் காத்திரமான உடல் மாற்றம் என்பது ரகசியமானது. ஆனால் அதனால் அவர்கள் அடையும் வேதனை பிரசித்தி பெற்றது.

Geetha said...

வணக்கம் சார்.நானும் சரவணன் அலைஸ் வித்யா நூலைப் படித்தேன்.மனம் கனத்து உடனே வி.சி.வில்வம் மூலம் அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.ஒரு சமூகத்தையே இதுவரை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் வாழ்ந்துள்ளோமே என வருத்தப்பட்டேன் .அவர்கள் மேல் தனி மதிப்பை உண்டாக்கிய நூல் அது.

Post a Comment