Wednesday, May 14, 2014

அடிமைகளுக்குத் தாய் மொழி இல்லை

முந்தைய பதிவில் , ஆனந்த விகடன் வாசகர்களுக்குச் சொன்ன ஒரு கதையை அடுத்த சந்திப்பில் சொல்லுவதாக எழுதி இருந்தேன் . இதோ அந்தக் கதை .
என் சொந்தக் கதையில்லை . எங்கோ படித்தது .என் மொழியில் உங்களுக்குச் சொல்லுகிறேன் 

அழகிய தோற்றமுடைய  ஒரு பச்சைக்கிளி , கரிய நிறங் கொண்ட ஒரு காகத்தைக் கண்டதும் கேலி பேசத் துவங்கியது .

" என்னைப் பார் ...என் அழகைப் பார் ... என் வண்ணங்களைப் பார் ...இந்தக் கழுத்தில் கூட ஒரு அழகிய வண்ணமான வட்டம் ஒளிர்வதைப் பார் ...நீயேன் இப்படிக் கருப்பாய் , காணச் சகிக்காமல் இருக்கிறாய் " என்று மனம் புண்படப் பேசியது ,

எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் காத்தது காகம் .

சில நாட்கள் சென்றன .

காட்டுக்குள் வந்த வேடன் அந்தக் கிளியைப் பிடித்துக்கொண்டு  போய் ஒரு கிளி ஜோசியக்காரனிடம்
விற்றான் .

ஜோசியக்காரன் கிளியின் நாக்கில் வசம்பைத் தேய்த்து , மனிதர்களின் மொழியைப் பேசப் பழக்கினான் . "வாங்க ,,, வணக்கம் " என்று மனிதர்களின் மொழியைப் பேசிக் கொண்டு , மனிதர்களின் தரும் உணவை உண்டு வாழ்ந்து வந்தது கிளி . உணவு கொண்டு வந்த ஜோசியக்காரனின் மனைவி , கொஞ்சம் உணவை எடுத்து , "கா... கா " என்று  உணவை ஏற்குமாறு காகத்தை அழைத்தாள் .

காகம் வந்தது . உணவை உண்டது .கிளியைப் பார்த்து கனிவுடனும் , பரிவுடனும் சொன்னது ...

" ஒரு கூண்டில் அடைபட்டு , உன் மொழியை மறந்து மனிதர்களின் மொழியைப் பேசிக் கொண்டு , அவர்கள் தரும் உணவை உண்டு வாழ்கிறாய் .நான் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருக்கிறேன் . மனிதர்கள் எனது மொழியைப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் .

உன்னை ஒருவன் சிறைப் பிடித்த போது , உன் இனத்தவர்கள் உன்னைப் காப்பாற்றாமல் ஓடி ஒளிந்து கொண்டார்கள் . ஒரு காகத்தை ஒருவன் சிறைப் பிடிக்க வந்தால் பிற காகங்கள் அதை அனுமதிப்பதில்லை . கத்திக் கூக்குரல் எழுப்பி , பிடிக்க வந்தவனைக் கொத்தி விரட்டி விடும் . அதையும் மீறி ,  அகப்பட்ட ஒரு காகம் எந்தக் கூண்டிலும் மனிதர்கள் தரும் உணவை உண்டு , மனிதர்களின் மொழி பேசி உயிர் வாழ்வதில்லை . வடக்கிருந்து இறந்து போகும் காக்கை .

அதனால் தான் காக்கைகள் தங்கள் மொழி பேசிக் கொண்டிருக்கின்றன .அடிமைகளுக்குத் தாய் மொழி இல்லை "

1 comment:

அ.பாண்டியன் said...

வணக்கம் ஐயா
அழகான கதை. காக்கைகள் மனிதர்களும் இருந்து விட்டால் தாய்மொழியாம் தமிழ்மொழி இன்னும் இன்னும் சிறப்பான ஆக்கங்களைப் பெற்றிருக்குமோ என்று தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி. தங்கள் பக்கத்திலும் இணைந்திருக்கிறேன் இனி வருகை தொடரும். நன்றீங்க ஐயா.

Post a Comment